Friday, December 30, 2011

குடும்பத் தலைவன்-தலைவி ஆகும் முன் பயிற்சி தேவையா?

திருமணம் செய்து கொள்ள பயிற்சிக்கூடம் தேவையா?

திருமணம் செய்து கொள்பவர்களுக்கென்று ஓரு பயிற்சிக்கூடமும் இல்லை.

தானாகவே யாரும் தங்களைத் திருமணத்திற்குத் தயார்ப் படுத்திக் கொள்ள திருமண ஆலோசனையாளர்களை நாடுவதும் இல்லை.

திருமணத்திற்கு முன் ஒருவரோடொருவர் பேசிப் பழகிக் கொள்ள இன்று வாய்ப்பு இருந்தும், அதற்கு சமூக சம்மதம் கிடைத்து விட்ட போதிலும், பல விதமான கம்யூனிகேஷன் சாதனங்கள் இருந்தும், இன்று திருமணத்திற்கு முன் தம்பதிகள் மனதில் தன்னம்பிக்கை இல்லை. பலவிதமான நெருடல்கள்.

பெண்களைக் கேட்டால் அவர்களை மிரட்டுகின்ற பயப்பூதங்களைப் பற்றிய புராணங்களே கேட்கலாம் :

எங்கள் வீட்டுப் பழக்க வழக்கங்களே எனக்கு சரியாகத் தெரியாது . நானும் தான் என் கணவனைப் போல படிப்பிலும் வேலையிலும் பிசியாக இருந்தேன். எனக்கும் படிக்கும் போது ப்ரொபசர்களின் கட்டுப்பாடும், வேலை கிடைக்குமா என்கிற கவலையும் இருந்தது.

இன்றும் மானேஜரின் மூடுக்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டிய நெருக்கடியும், பெண்களுக்கென்று இருக்கும் வரைமுறைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் டென்ஷெனும் இருக்கிறது.

ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால் கூட ஆறு மாதங்களாவது உற்பத்தித் திறனை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கிரகப்பிரவேசம் ஆன நாளே புகுந்த வீட்டுக் கலாசாரப்படி நடந்துகொள்கிறோமா என்று நோட்டம் பார்த்து கிண்டல் செய்யவென்று சில உறவினர்கள். மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன், மச்சினர் என்று நேரடியான உறவினர்கள்.

எத்தனை கல்சுரல் சென்சிடிவிடியோடு இருந்தாலும் இவர்களின் குறுக்கீடு உருவாக்கும் மனப்புழுக்கத்தை கட்டுப்படுத்துவதில் பவர்லெஸ்ஸாக இருக்க வேண்டியிருக்கிறது. திருமண வீட்டில் சண்டை வரக் கூடாது என்ற பயத்தில் வாயில்லாப் பூச்சியாக இருக்க வேண்டிய கட்டாயம்.

இந்த அக்னிப்   பரீட்சையைத்  தாண்டிய பின் தினப்படி வாழ்க்கை கூட, அது கூட்டுக் குடித்தனமானாலும் சரி, தனிக் குடித்தனமானாலும் சரி, அமைதியாக நடக்க வேண்டுமானால் பெண்கள்தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கிறது.

எங்களுடைய ஹாபிகள், கனவுகள், தீர்மானங்கள் எல்லாமே தவிடுபொடி ஆகின்றன. ஒரு புதியபிறவி எடுப்பது போல ஆகி விடுகிறது. தனித்துவமே இல்லாத வாழ்க்கையை தான் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் தலையெழுத்து என்று ஏற்றுக்கொண்டு அவதிப்படுகிறோம். இது விட்டுக் கொடுத்து வாழுகிற அதிகாரபூர்வமான சாயிஸ் அல்ல. இந்த நோக்கு தன்னம்பிக்கையில்லாத பயத்தை ஆதாரமாகக் கொண்டு உருவாகிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று எங்களுக்குத் தெரிகிறது.

இப்படிக் கணக்கில்லாத பொருமல்கள்.

பையன்களிடம் கேளுங்கள். கல்யாணமென்றால் காத தூரம் ஏன் ஓடுகிறார்கள் என்பதன் விடை சீக்கிரமாகவே கிடைக்கும். உரலுக்கு ஒருபுறம் இடி, மத்தளத்திற்கு இருபுறம் என்ற புராணமான உவமைக்குள் அரவமற்ற ஆட்சேபனைகள், மழுப்பலுக்குள் மறைந்த புலம்பல்கள்.

இந்தக் காலக் கணவர்களுக்கு பல சவால்கள். நாங்கள் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு எத்தனையோ திறமைகள், எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன என்பது எங்களுக்கும் தெரியும். எங்களுக்கும் இந்த நவீனப் பெண்ணைப் பிடித்திருந்தாலும் காலத்திற்கேற்ற மனப்பாங்கு எங்கள் வீட்டாருக்கு இல்லை என்றால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவதிப்பட வேண்டியிருக்கிறது.

வேலைக்குப் போகும் மனைவிக்காக சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் பெண்டாட்டிதாசனாகி விடுகிறோம். மாறாவிட்டால் புறம்போக்கு.

திருமணத்திற்கு முன் பெண்களுக்கு எங்கள் ஹாபிலிஸ்ட் பெரிதாக இருந்தால் நாங்கள் இன்ட்ரெஸ்டிங்க் ஆக இருக்கிறோம். திருமணமான பின்னால் அதே ஹாபி எங்களுக்கு எமனாகி விடுகிறது. பலவிதமான இடர்பாடுகளை மீறிக் கற்றுக்கொண்ட பல நடவடிக்கைகளை அம்போ என்று மறந்து விட்டு வீடே கதியாக இருந்தால் தான் நல்ல புருஷன்.

இப்படிப் பல பொருமல்கள்.

எப்படி உறுதியாக, தன்முனைப்புடன், அதே சமயம் அடாவடித்தனமுமில்லாமல் தன் எண்ணங்களை எடுத்துச் சொல்வது என்று
திருமணப் பெண்ணிற்கும், பையனுக்கும் ஏன் பயிற்சி தருவதில்லை?

கல்சுரல் சென்ஸிடிவிடியுடன் பரிமாறுவது எப்படி என்று மாமியார்
மருமகளுக்கு இணைந்து ஒரு பயிற்சி கொடுப்பது அவசியமில்லையா? திருமணத் தம்பதிகளுக்கு எப்படி நேரத்தை தனக்காகவும், குடும்பத்துக்காகவும், சமச்சீர்மையோடு பகிர்ந்தளிப்பது என்று சொல்லித்தந்தால் இவர்களுக்கு தங்கள் தனித்துவத்தை பலி கொடுக்காமல் குடும்பத்திற்காக ஒத்துழைப்பது எத்தனை சுலபமாக இருக்கும்?

வருமானத்தை எதிர்காலத்திற்காக எந்த முறையில் சேமிப்பது என்று திருமணத்திற்கு முன் ஒரு இணைந்த திட்டம் திருமணத் தம்பதிகளோடு இணைந்து உருவாக்கினால் வளமான எதிர்காலம் பற்றிய பயம் அல்லது அது குறித்த பாதுகாப்பின்மையால் விளையும் மனத்தாங்கல்கள், இவை தவிர்க்கப்படலாமே.

தம்பதிகள் தங்கள் கனவுகளை, குறிக்கோள்களைப் பகிர்ந்து கொண்டு அவற்றை அடையும் வழிமுறைகளை சேர்ந்து திட்டமிட திருமணத்திற்கு முன்னர் நிபுணர்கள் வழி அமைத்துக் கொடுத்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு முன்னேறுவது எத்தனை எளிவான காரியமாகிவிடும்?

எத்தனைதான் திருமனத்திர்ற்கு முன் பழகி இருந்தாலும், திருமணமானதும் பல விஷயங்கள் மாறி விடுமென்பதைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைப் பெற முன்னதாகவே மனப்பான்மை பயிற்சி, அதாவது ஆட்டிட்யூடினல் ட்ரெய்னிங் கொடுப்பது அவசியமில்லையா?

இன்றைய காலத்தில் முதிர்ச்சி அடைந்த பின்னர் திருமண பந்தத்தில் இணையும் தம்பதியினருக்கு முந்தைய காலத்தில் சிறு வயதில் இணையும் தம்பதிகளைப் போல வளைந்து கொடுக்கும் தன்மையோ, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குரிய நேரமோ இல்லை. ஆனால், மன முதிர்ச்சியுடன் பொறுப்புணர்வும், நிதானமும், அனலிடிகல் திங்கிங்கும் இருக்கின்றன. நல்ல வழிகாட்டும் திருமணத் தயார்ப் பயிற்சி கிடைத்தால் சீரான வளமான குழப்பமில்லாத ஒளிமயமான வாழ்க்கை இவர்களுக்கு நிச்சயம்.

இன்று திருமணத்திற்காக ஒரு வருடம், ஆறு மாதங்கள் முன்னரே அழகு நிலையங்களில் ஆலோசனை , சிகிச்சை பெறுவது முக்கியமாக ஆகி விட்டது . இந்த வெளிஅழகின் இம்பேக்ட், தாக்கம், சில மாதங்களே ஆனாலும், அந்த நிமிடத்தில் உருவாகும் ரொமான்ஸ், மிகவும் முக்கியமானது. ஆனால் வாழ்க்கை முழுவதும் பலனளிக்கும் மனப்பக்குவப் பயிற்சியும் தயாரிப்பும் அதை விடவும் முக்கியம்.

குடும்பமே சமூகத்தின் அடித்தளம் என்று நாம் எல்லாரும் அறிவோம். ஆனால் இந்தக் குடும்பத்தை ஏற்று நடத்தும் குடும்பத் தலைவருக்கும் தலைவிக்கும் நாம் நீச்சல் பயிற்சி அளிக்காமல் சம்சாரசாகரத்தில் தள்ளி விடுவது எந்த விதத்தில் நியாயம்?